Saturday, January 24, 2009

இலங்கையில் நேற்றே போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென, சட்டசபையில் இறுதித் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை வலியுறுத்திய முதல்வர் கருணாநிதி, இலங்கையில் வாடும் அப்பாவித் தமிழர்களுக்கு உதவ அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் தயார் என்று கூறினார்.இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி, தமிழக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது பீட்டர் அல்போன்ஸ்(காங்.,), செங்கோட்டையன்(அ.தி.மு.க.,) உட்பட பலரும் பேசினர்.

தொடர்ந்து, தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை கடைசியாக ஒரு முறை மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதற்குத் தான், இந்த தீர்மானம் அவசர, அவசியமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 1939ம் ஆண்டு, "இந்தியன் இன் சவுத் ஏசியா' என்ற நூலில், "இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது, வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால், இந்தியா அவர்களையும், அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும், இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் - அன்று இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும். அதன் வலிமையால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்' என்று நேரு குறிப்பிட்டுள்ளார். நேரு சொன்னதை இப்போது வலியுறுத்தி, தீர்மானத்தை முன்மொழிகிறேன். இலங்கையில் தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது. ஐ.நா., கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு அந்த நாடு, அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக, சுடுகாடாக ஆகிக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதால், நம்மை காக்கும் பொறுப்பை மத்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க்கிறோம். இந்த மாநில மக்களுக்கும், இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்தரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு, உலகில் எங்கு இனப் படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும், உரிமையும் கொண்ட மத்திய அரசின் கரங்களில் உள்ளது. அந்த கரங்களைப் பிடித்துக் கொண்டு, இலங்கையில் செத்து மடியும் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம். கேட்டுக் கேட்டு பயன் விளையாத நிலையில், இறுதி வேண்டுகோளாய் முறையிடுகிறோம். உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து, அங்கு அமைதிப் பூ மலர ஆவன செய்திட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து இறுதி தீர்மானமாக இதை முன்மொழிகிறேன். இந்தத் தீர்மானத்திற்கும் பயன் ஏதும் ஏற்படாவிட்டால், தி.மு.க., பொதுக்குழு அல்லது செயற்குழுக் கூட்டத்தில் விவாதித்து, அடுத்து என்னவென்று முடிவு எடுக்கப்படும். இங்கே பேசிய நண்பர்கள் சில பேர், ஆட்சி எதற்காக என்றனர். ஆட்சி என்று ஒன்று இருக்கின்ற காரணத்தால் தான், நாம் இந்த அளவிற்காவது போராட முடிகிறது. நாளைக்கே ஆட்சியை இழந்து விட்டால், இலங்கையில் தமிழ் ஈழம் மலரும் என்ற உறுதி கிடைக்குமானால், அதற்கும் நாம் தயாராக இருப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

No comments:

Post a Comment